
வீரத்திருமகன்
சீர்காழி இரவிச்சந்திரன்
2009.02.07
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைப்பதாக கூறி இன்று (2009.02.07) காலையில் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். சீர்காழி நகர 17-வது வார்டு காங்கிரஸ் இணை செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். தலைஞாயிறு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேவைபார்த்து வந்தார்.
இன்று அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடினார்.
நடுத்தெருவில் வைத்து இலங்கையில் போரை நிறுத்து….தமிழ் வாழ்க.. என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து விட்டார்.
உடனே ரவிச்சந்திரன் உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை தூக்கிச்சென்று சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் தஞ்சைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் டாக்டர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறி விட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார் ரவிச்சந்திரன்.
மரணமடைந்த ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ்காரர்தான். மகளிர் காங்கிரஸ் உறுப்பினராக உள்ளார். ரவிச்சந்திரன் உடலுக்கு இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினரும், பெரும் திரளான தமிழ் உணர்வாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸார் திரண்டனர்:
முன்னதாக ரவிச்சந்திரன் தீக்குளித்த தகவல் பரவியதும், காங்கிரஸ் நிர்வாகிகள், பெரும் திரளான தொண்டர்கள் மயிலாடுதுறை மருத்துவமனை முன்பு திரண்டனர். அதேபோல, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரும் திரண்டு வந்தனர். காங்கிரஸாரைப் பார்த்த அவர்கள், ரவிச்சந்திரனைப் பார்க்கக் கூடாது என்று கூறி தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட போலீஸார் இரு தரப்பினரையும் விலக்கி அமைதிப்படுத்தினர். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை மூன்றே முக்கால் மணியளவில் ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இதனால் சீ்ர்காழி, மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
காங்கிரஸால் அவமானம் – மரண வாக்குமூலம்:
முன்னதாக மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டிடம் ரவிச்சந்திரன் கொடுத்த மரண வாக்குமூலத்தில், அதில் ஈழத்தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் (காங்கிரஸ்) முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இந்தியா இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
ஈழத்தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் வேதனை பொறுக்காமல் தீக்குளித்தான் என் மகன் – ரவிச்சந்திரன் தாயார் உருக்கம்!
நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ரவிச்சந்திரனின் தாயார் தன் மகன் தீக்குளிப்பு பற்றி உருக்கமாக….
என் மகன் எப்ப பார்த்தாலும் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படறாங்க. அதை தடுக்க முடியாம இருக்கோம். டி.வி.யிலயும், பேப்பர்லயும் வர்ற செய்தியையும், போட்டோவையும் பார்த்தாலே நெஞ்சு எறியுதுன்னு புலம்புவான்.
காங்கிரஸ் கட்சிக்கூட்டத்திலயும் நாம் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கணும்னு சண்டை போட்டிருக்கான். நேத்திக்கு ராத்திரி டி.வி.யில் ஆஸ்பத்திரி மேல இலங்கை ராணுவம் குண்டு போட்ட செய்தியை பார்த்ததும் தற்கொலை பண்ணிக்க போறேன்னு சொன்னான். அப்படி எதுவும் பண்ணிக்க கூடாதேன்னு நாங்க அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பாம வச்சிருந்தோம். அப்படியும் நாங்க தூங்கினதும் எங்களுக்கு தெரியாம எந்திருச்சு வந்து இப்படி பண்ணிக்கிட்டான். என் புள்ளையை இந்த நிலமையில் பார்க்க கஷ்டமா இருக்கு. இப்பவும் அவன் ஈழத்தமிழர்களுக்கு உசுரை காணிக்கையா தர்றேன்னு தான் சொல்றான் “ என்று கதறியபடி பேசினார் ரவிச்சந்திரனின் தாயார் சரஸ்வதி.
சரஸ்வதியும் பல வருடங்களாக காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருக்கிறார்.

The remains of Cheerkaazhi Ravichandran

ஈழத்தமிழருக்காக தீக்குளித்து மாண்ட சீர்காழி இரவிச்சந்திரனின் இறுதி மடலின் நகல்:
ஈழத்தமிழருக்காக தீக்குளித்த சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். தீக்குளிப்பதற்கு முன்பு தனது இல்லத்தில் இரு பக்கம் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இறுதி மடலில் எழுதப்பட்டிருந்ததாவது, என் பெயர் எஸ். இரவிச்சந்திரன். த.பெ. சுந்திரமூர்த்தி, 1 ஏ, பிடாரி தெரு, சீர்காழி.
தமிழ் ஈழத்தை காப்பாற்றுவோம். தமிழர்களை தலை நிமிரச்செய்வோம். தமிழனை வாழ வைப்போம். என்றும் அன்புடன் ரவிச்சந்திரன்..
ஈழத்தமிழர் வாழ வழிசெய்யாத இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மானங்கெட்ட தமிழக அரசே என் உயிர் துறந்தால் தரமுடியுமா? என் அருமை தமிழர்களே.. இலங்கை அரசே என் உயிர் தருகிறேன். போரை நிறுத்த வேண்டும் என்று எழுதியிருந்தார்.


















































































