அகிம்சைக்கே அகிம்சையைப் போதித்து, பன்னிரு நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல், தனது உடலைவிட்டு ஆன்மா பிரியும் இறுதித் தருவாய்வரை, தான் எடுத்துக் கொண்ட அகிம்சைப் போராட்டத்தை, இறுதிவரை உறுதியோடு சற்றும் மனந்தளராமல், தியாகத்தின் அதி உச்சம் தொட்டு, இந்திய தேசத்தின் போலி முகத்திரையை கிழித்தெறிந்துவிட்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வுடன்…
தியாகதீபம் திலீபன் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுரும் படையின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டவரான, தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்,
29.09.2024 ஞாயிறு அன்று பிற்பகல் 2:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை, தமிழீழ அரசியல்துறை – ஐக்கிய இராச்சிய நிர்வாகத்தினால், மிகவும் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதும், பல அமைப்புகள் சார்ந்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், இன உணர்வாளர்கள், மாவீரர்களுக்கான மலர் வணக்கத்தினைச் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்கள் மற்றும் கேணல் சங்கர் அவர்கள் பற்றிய தங்களின் நினைவுப் பகிர்வுகளையும், மாவீரர்களின் வீர வரலாறுகள் குறித்தும் உரைகள், கவிதைகள், எழுச்சிப்பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தனர்.
இறுதியில் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற கோசங்களை எழுப்பி, “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதியேற்புடன், தேசியக் கொடி கையேற்கப்பட்டு நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றது.



























































































































































