தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
19/06/2024
“தன்னலம் கருதாததோர் உன்னத மனிதர் மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள்.”
தமிழீழ தேசத்தின் விடுதலையைத் தணியாத இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதர் ஒருவரை, இன்று நாம் இழந்துவிட்டோம். ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக ஒளிர்ந்த, ஒரு இலட்சிய நெருப்பு அணைந்து விட்டது. ஈவிரக்கமற்ற இயற்கையின் பசிக்கு, தமிழினப் பற்றாளர் ஒருவர் இரையாகி விட்டார். அந்த இலட்சிய மனிதராகிய மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா அவர்களை இழந்த எமது தேசம், இன்று ஆறாத்துயரில் மூழ்கிக் கிடக்கிறது.
மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள் சுயநலங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல மனிதர்; அசாத்திய குண இயல்புகள் கொண்டவர்; இரக்ககுணம் நிறைந்தோர் இனிய மனிதர்; அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும், மனிதாபிமானத்தோடும் நடந்து கொண்டவர்; அனைவரையும் கவர்ந்து கொண்டதோர் புரட்சிகரமான எண்ணங்கொண்ட மருத்துவர் இவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமறைவு போராட்டத்தின் ஆரம்ப கால கட்டத்தில், 1982ம் ஆண்டு ஒக்டோபர் 27ம் நாளன்று, சாவகச்சேரி காவல் நிலையம் மீதான புலிகளின் கரந்தடித் தாக்குதலில், காயமடைந்த போராளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த காரணத்தால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டார். 1983 இனக் கலவரத்தின் பின்னர், வெலிக்கடைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமற்ற சூழ்நிலையில், மட்டக்களப்புச் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்ட இவர், 23.09.1983 இல் நடைபெற்ற மட்டக்களப்புச் சிறையுடைப்பு நடவடிக்கை மூலம், மீட்கப்பட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ் சமூகத்தில் உயர் பதவி வகித்த ஒருவர், இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்த பின்பும், அங்கிருந்தவாறு தொடர்ந்தும் இன விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருந்த காரணத்தால், தமிழ் மக்களால் பெரிதும் உயர்ந்த மனிதனாக இவர் போற்றப்பட்டார். . இவரது இழப்பு, தமிழர் தேசத்திற்கு என்றுமே இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாகும்.
தமிழீழத் தனியரசே, தமிழரின் தேசிய இனப் பிரச்சனைக்கு, உறுதியான தீர்வு என்பதில் இவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். தமிழர்களின் உயிர்களையும், உடைமைகளையும் அழித்து, தமிழரின் நிலத்தையும் வளத்தையும் சூறையாடி, ஒட்டுமொத்த தமிழரின் தேசிய இன அடையாளத்தையே, சிதைத்து விடும் நோக்குடன் சிங்கள அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போரை இவர் முழுமையாக எதிர்த்து நின்றார். இந்த இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ் மக்கள் முற்றாக விடுபட்டு சுதந்திரமாக, நிம்மதியாக, கௌரவமாக வாழ்வதையே தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரித்துக்கொண்டார். இந்த இலட்சியப்பற்று அவரை எமது விடுதலை இயக்கத்தோடு இறுகப் பிணைத்திருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் போராட்ட இலட்சியத்தையும் உளமார ஏற்று, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தவர் மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள்.
தமிழீழ விடுதலைப் போரில் விழுப்புண்ணடையும் அனைவருக்கும் காத்திரமான மருத்தவ வசதிகளை வழங்கவேண்டுமென்ற, தமிழீழத் தேசியத் தலைவரின் உயரிய சிந்தனைக்கு அமைவாக, தமிழீழ மருத்துவக் கல்லூரியை உருவாக்கி, அதன் முதல்வராகப் பணியாற்றியது மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாணவர்களைப் போர்க்கால மருத்துவர்களாக வளர்த்தெடுத்த ஆசானும் இவரே. இந்த மருத்துவ ஆளணி எத்தகைய ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டுமென்பதிலும், குறிப்பாக போர்க்கள மருத்துவப் பணிக்காக மாணவர்களைத் தயார்படுத்தி, அவர்களோடு உடனிருந்து பணியாற்றியதை, அவரோடு ஒன்றாகப் பயணித்த பலரும் அறிவர். ஒரு விடுதலை இயக்கத்திற்குத் தேவையான மருத்துவர்களுக்குரிய போர்க்கால மருத்துவக் கற்கைநெறி ஒன்றை உருவாக்கி, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அவற்றைக் கற்பித்து, பாண்டித்தியமும், அர்ப்பணிப்பும் மிக்க மருத்துவர்களாக அவர்களை வளர்த்தெடுத்ததோடு, தொடர்ச்சியாக தமிழீழ மருத்துவத் துறையின் ஆலோசகராகச் செயல்பட்டிருந்ததை, இன்றும் உயிர் வாழும் சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழ மருத்துவத்துறைப் போராளிகள் நன்கு அறிவார்கள்.
இவற்றைவிட தமிழ் நாட்டில் இருந்த போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உருவாக்கத்திற்கும், தாயகம் திரும்பிய பின்பு வெண்புறா செயற்கைக்கால் தயாரிக்கும் நிறுவனத்தின் தோற்றத்திற்கும் முன்னின்று செயல்பட்டதோடு, இறுதி வரை அவற்றின் தலைவராகவும், ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முல்லை மாவட்ட அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிய கடமைக் காலம் முழுவதும், அனைவருக்கும் இலவச மருத்துவச் சேவையை வழங்கியவர் என்பதை இங்கு பெருமையுடன் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஏனெனில் உயிர் காக்கும் மருத்துவத்தை வியாபாரம் செய்யும் இன்றைய நாகரீக வர்த்தக உலகில், இவரைப் போன்ற இனப்பற்றும், மனிதாபிமானமும் நிறைந்த மருத்துவர்களைக் காண்பது அரிதாகவே உள்ளது.
மிக முக்கியமாக தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த இவர், தொடர்சியாகத் தேசியத் தலைவர் அவர்களோடு தொடர்புகளைப் பேணிவந்தார் என்பதிலிருந்து, இந்த உன்னத மனிதனின் விடுதலை வேட்கை எத்தகைய மகத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளலாம்.
கலாநிதி ஜெயகுலராஜா அவர்களின் இனப்பற்றிற்கும், விடுதலை வேட்கைக்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியை கௌரவிக்கும் முகமாக, அவருக்கு “மாமனிதர்” என்ற அதி உயர் தேசிய விருதை வழங்கி மதிப்பளிப்பதில், தமிழீழ அரசியல்துறையினராகிய நாங்கள் பெருமை அடைகின்றோம். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த, உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
திருமதி. ச. அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்




















































































