அன்பான தமிழ் மக்களே!
ஈழத் தமிழர் வரலாற்றில் ஆறாத வடுவாக பதிந்திருக்கின்ற பெரும் துன்பத்தில் 15 ஆம் ஆண்டு நினைவு நாளை, நாமின்று நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். 21 ஆம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு நடவடிக்கை முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது. இதனைத் தமிழர்கள் மறந்து ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழரின் இனவழிப்பின் குறியீடு மட்டுமல்ல, வீரத் தமிழரின் தன்மான உணர்வுக்கு சவால் விடுத்த நாளுமாகும்.
அன்றைய நாட்களில் உலகத் தலைநகரங்களின் ஆட்சிப் பீடங்களுக்கு முன்பாக, இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் அணி திரண்டு, நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருந்த போதும், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டார்கள். எமது உடன் பிறப்புக்கள் உணவின்றி பட்டினியாலும், குண்டடிபட்டு, மருத்துவ சிகிச்சை இன்றியும் மடிந்தார்கள். அத்துடன் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுத் தாக்குதலுக்கும் அநியாயமாக இரையாகிப் போனார்கள்.
இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் யூதர்களை, அன்று கொன்றொழித்த கிட்லர் கூட அவர்கள் இறந்த பின்புதான் புதைத்தான். ஆனால், முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா இனவெறி இராணுவமோ ஈழத் தமிழர்களை உயிருடன் துடிதுடிக்கப் புதைத்தார்கள். அந்த மண்ணில் நிகழ்ந்த அத்தனை கொடுமைகளையும், சொல்லிவிட மனித மொழியில் வார்த்தைகளே இல்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழ மக்கள் எழுப்பிய மரண ஓலங்கள், இன்றும் ஆன்ம ஓலங்களாக, தமிழர் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. சிங்கள பௌத்த இனவெறி அரசின் கொடூர இனவழிப்பு தாக்குதலுக்கு எதிராக, முள்ளிவாய்க்கால் மண்ணில் விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புச் சமர்கள், தமிழீழ மண்ணின் மீதும், மக்கள் மீதும் அவர்கள் வைத்திருந்த பற்றுறுதிக்கு தக்க சான்றாகும். சர்வதேச நாடுகளிடம் பெற்ற அதியுயர் தொழில்நுட்ப வலுவான ஆயுதங்களின் உதவியோடும், அவர்கள் வகுத்துக்கொடுத்த சதித்திட்டங்களுடனும், குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்து கொண்டு, நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு, எதிரிகளை வீழ்த்தி, வீரகாவியமான புலி வீரர்களின் வீர வித்துடல்கள், அந்த மண்ணிலேயே விதையாகிப் போனதை, நாம் எப்படி மறந்துபோக முடியும். தம் இறுதி மூச்சு வரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதி ஒருபோதும் வீண் போகாது.
தமிழீழம் என்ற தணியாத இலட்சியத்திற்காக, எத்தனை கொடும் துன்பங்களையும், சுமக்கத் தயாராக இறுதிவரை, எம்மோடு கூட வந்த மக்களின் அவலம் தோய்ந்த வாழ்வை, எம்மால் என்றும் மறக்க முடியாது. முள்ளிவாய்க்கால் என உச்சரிக்கும் போது, சிங்கள பௌத்த இனவெறி அரசு, தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்ட, இன அழிப்பே நினைவில் வருகிறது. எந்த மண்ணில் எமது ஆயுதப் போராட்டம் முடிவுபெற்றது என, சிறீலங்கா அரசு அறிவித்ததோ, அதே மண்ணில் இருந்துதான், எமது மக்களின் அறிவாயுதப் போராட்டம் ஆரம்பித்து, தமிழர்கள் செறிந்து வாழும் நாடெங்கிலும் எழுச்சிபெற்று வருகின்றது. எனவே, முள்ளிவாய்க்கால் முடிவல்ல, தமிழின எழுச்சியின் இன்னுமோர் ஆரம்பமாகும். முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் உயிர் காத்த “முள்ளிவாய்க்கால் கஞ்சி” முள்ளிவாய்க்கால் புனித பூமியில், நடந்தேறிய தமிழின அழிப்பை, தலைமுறை தலைமுறையாக, எமது அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்திக் கொண்டேயிருக்கும்.
அன்பான தமிழ் மக்களே!
எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, உலக மக்களிடம் கொண்டு செல்வதற்கு, நாம் கடுமையாக உழைக்க வேண்டும். உளப்பூர்வமாக எமக்குரிய ஆதரவை தரக்கூடிய, தரப்புகளை இனம் கண்டு, அவர்களோடு தோழமை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கைத்தீவிலே சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது கட்டுப்படுத்த முடியாத, பெரு விருட்சமாகி வளர்ந்து நிற்பதை, இன்று உலகம் உணரத் தொடங்கியுள்ளது. அதன் கோர முகம் தனியே எமது விடுதலைப் போராட்டத்தின் விளைவு என்பதாகக் கருதிவந்த உலகம், இன்று அனைத்தையும் உன்னிப்பாக அவதானிக்க தொடங்கியுள்ளது. வல்லாதிக்கப் போட்டியில் பந்தாடப்படுகின்ற இலங்கைத் தீவில், தமிழர்கள் உட்பட ஒடுக்கப்படுகின்ற மக்களுக்குரிய நியாயமான தீர்வு, பேரினவாத பூதத்தை இல்லாதொழிப்பதில் தான் தங்கியுள்ளதே, அன்றி அதனைப் பலப்படுத்துவதில் அல்ல, என்பதை உலகம் விரைவில் விளங்கிக்கொள்ளும்.
நீண்ட நெடிய ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு, எமக்குக் கற்றுத் தந்த பாடங்கள் ஏராளம். குறிப்பாக இந்த 15 ஆண்டுகளில் உலகத்திடமிருந்து நாம் கற்றுக்கொண்டது, எமக்கான விடுதலையை யாரும் எமக்காகப் போராடிப் பெற்றுத் தந்துவிடப் போவதில்லை, நாமே எமக்காகப் போராடி எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், என்ற உண்மையை காலம் நமக்கு உணர்த்தியுள்ளது. எமக்கான நீதிப் பயணம் பிராந்திய பூகோள நலன்களுக்குள், வல்லரசுகளின் அழுங்குப் பிடியில் சிக்குண்டு போயுள்ளது. ஆகையால் இன்றைய நவீன சனநாயக உலகின் மனச்சாட்சியை, வென்றெடுக்கக் கூடிய வகையில் கோட்பாட்டுடன் கூடிய யுக்திகளைப் பயன்படுத்தி, சனநாயக அரசியல் வழிமுறையில் நாம் தொடர்ந்து போராடுவோம். எமக்கான பன்னாட்டு ஆதரவுத் தளங்களை இனங்கண்டு, அவர்களோடு கைகோர்த்து, எமது விடுதலைப் போராட்டத்தைச் சரியான திசையில் முன்நகர்த்தி எமது தாயக கனவை நிறைவேற்றுவோம்.
எமது உரிமை மீட்புக்கான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து, உலகத்தை ஏமாற்றிய சிங்கள பேரினவாத அரசும், இந்த இன அழிப்பு நடவடிக்கைகளுக்காக, தமது தொண்டு நிறுவனங்கள் யாவற்றையும், எமது மண்ணை விட்டு அப்புறப்படுத்தி, இன அழிப்பை வேடிக்கை பார்த்து இரசித்த பன்னாட்டு சமூகமும், கடந்த 15 ஆண்டுகளாக தமிழர்களுக்கான நீதியான தீர்வையோ, அன்றி குறைந்தபட்ச உரிமைகளையோ, பெற்றுக் கொடுப்பதற்கு எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை, என்ற கசப்பான உண்மையை, எமது மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைக்காக, எமது தாயக மண்ணில் வித்தாகிப்போன வீர மறவர்களையும், இந்த இலட்சியப் போராட்டத்திற்கு முதுகெலும்பாக இருந்து, எமது விடுதலைப் பயணத்தை நடாத்த உதவிய மக்களின் அளப்பரிய தியாகத்தையும், ஆழ் மனதில் நிறுத்தி, அவர்கள் எல்லோரும் எதற்காகத் தங்களை அர்ப்பணித்தார்களோ, அந்த இலட்சிய நோக்கம் நிறைவேறும் வரை, நாம் தொடர்ந்து போராடுவோம் என உறுதியேற்போம்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
திருமதி.ச.அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்




















































































