வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் சிவராத்திரி வழிபாட்டின் போது பேரினவாத சிங்கள அரசின் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது .
தாயக விடுதலை வேண்டி தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களின் நினைவேந்தல் நாளிலும் மற்றும் தமிழர்களின் வழிபாட்டு உரிமை நாளிலும் அப்பட்டமாக மறுக்கப்பட்டு மிக மோசமாக தமிழர் சமய விழுமியங்களை சடங்குகளை அவமதித்து அதன் உச்ச கட்டமாக சிங்கள பொலிசாரின் அடாவடித்தனம் தலைவிரித்து ஆடியுள்ளது. சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும் கட்டளை விதித்து அதை மீறினால் கைது செய்வதாக அதட்டியுள்ளனர்.
இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் வழிப்பாடு நிகழ்வுகளை முன்னெடுத்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் வழிப்பாட்டுப் பொருட்களை பேரினவாத சிங்கள பொலிசார் உடனடியாக அப்புறப்படுத்தி வழிபாடுகளை இடைநிறுத்தி படையல் பொருட்கள் சப்பாத்து கால்களினால் சீருடை தரித்த நபர்களால் தட்டி அகற்றி பூசகரை கைது செய்து இத்தகைய ஈனச் செயல்களை பேரினவாத சிங்கள பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

கோவிலுக்கு வாழைப்பழம் பூசைபொருட்களை தானே கொண்டு போனார்கள் வெடிகுண்டு ஆயுதங்கள் எதுவும் கொண்டு போகவில்லையே எதற்காக இவர்களை கைது செய்ய வேண்டும். தமிழர் தாயகத்தில் தமிழர்கள் நாங்கள் கடவுளை வழிபாடு செய்வதற்கு கூட உரிமையில்லையா எந்த தவறும் செய்யாத அப்பாவிகளை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்துள்ளனர்
சிங்கள பொலிசாரின் அடாவடி அளவு கடந்து செல்கின்றது. கைது செய்யப்படுவதற்கான எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் பொய்யான வகையில் தொல்பொருட் திணைக்களத்தால் நீதிமன்றிற்கு அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அத்துமீறல்களைச் செய்தது முழுதும் தொல்பொருட்திணைக்களத்தினரே
8 பேருமே எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள். இந்த சந்தேக நபர்கள் தொல்லியல் சின்னங்களிற்குச் சேதத்தினை ஏற்படுத்தியதாக தொல்லியல் திணைக்களத்தால் உண்மைக்குப் புறம்பான ஒரு பொய்யான அறிக்கையினை நீதிமன்றிலே தாக்கல்செய்துள்ளது. உண்மையில் அவ்வாறான எத்தகைய சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.
சிங்கள பேரினவாத அரசு அதாவது தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிசா ர் கூட்டிணைந்து சிங்கள பௌத்த மயமாக்கல் திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் வழிபாட்டில் ஈடுபடுகின்ற தமிழர்களை விரட்டியடித்து அந்த இடத்தில் பௌத்த மயமாக்கலுக்கு எடுத்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில், ஆலய பூசகரையும் பக்தர்களையும் கைது செய்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் அந்தப் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத அச்சநிலையை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களை கைது செய்த பின்னரே தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என்பவற்றிடம் கடிதங்கள் பெறப்பட்டு அப்பாவிகளை குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பொய் குற்றச்சாட்டில் உள்ள 8 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இவர்கள் உடல் மோசமடைவதற்கு முன்னர் விடுவிக்கப்பட வேண்டும்.
பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இனவாத செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும் அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும் அந்த எட்டுபேர் மீதும் எந்தவிதமான தவறும் கிடையாது.அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் இத்தகைய சிங்கள பேரினவாத அரசின் அத்துமீறல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் .


















































































