இமாலயப் பிரகடனமும், தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடும்

அன்பார்ந்த தமிழீழ மக்களே !

இமாலயப் பிரகடனம் தொடர்பாக தமிழீழ அரசியல் துறையின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், நீண்ட பல ஆண்டுகளாகத் தமிழினத்தின் விடுதலை இலக்கு நோக்கிய குறிக்கோளின் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் எமது கடப்பாடாகவுள்ளது.

உலகத் தமிழர் பேரவை (GTF), உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணாக இந்தப் பிரகடனம் அமைந்துள்ளது. ஆரம்ப காலங்களில் சிறப்பாகச் செயற்பட்ட இந்த அமைப்பு, தற்போது சில தனி நபர்களால் கையகப் படுத்தப்பட்டு, அவர்களின் தன்னிச்சையான விருப்பங்களுக்கு இசைவாகச் செயற்பட்டு வருகிறது. இதுபோன்று செயற்படும் இன்னுமொரு அமைப்பாகிய கனேடியத் தமிழ் காங்கிரசும் (CTC) இணைந்து, சனநாயக ரீதியில் பின்பற்ற வேண்டிய அடிப்படை மரபுகளைப் புறந்தள்ளி, இந்தப் பிரகடனத்தை செய்ததன் மூலம் உலகத்தமிழர் பேரவை (GTF) மற்றும் கனேடியத் தமிழ் காங்கிரஸ் (CTC) ஆகிய இரு அமைப்புக்களும் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் சமூகத்திலும் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

உலகத் தமிழர் பேரவையும் (GTF), அதன் இணைப் பங்காளி அமைப்புமாகிய கனேடியத் தமிழ் காங்கிரஸ் (CTC) பிரதிநிதிகளும் கூட்டாக, கனேடிய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஓர் போர்க்குற்றவாளி யாகிய மகிந்த ராஜபக்சவை சந்தித்ததனூடாக, கனேடிய வெளிவிவகாரக் கொள்கைக்கு முரணாகச் செயற்பட்டதாக கனேடிய அரசியல்வாதிகளின் கண்டனத்திற்கும், கனேடியத் தமிழ் மக்களின் உச்சகட்டக் கோபத்திற்கும், உலகத் தமிழர்களின் எச்சரிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்தப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களிடம் இந்தப் பிரகடனத்தைச் செய்வதற்கு முன், பெறவேண்டிய மக்கள் ஆணை பெறப்படவில்லை. உண்மையில் மக்கள் ஆணை பெறப்படாத, மக்களின் ஏகோபித்த ஆதரவற்ற அமைப்புக்களால் செய்யப்பட்ட இந்தப் பிரகடனம் ஒரு செல்லுபடியற்ற பிரகடனமாகும். இது போன்ற நல்லிணக்க முயற்சிகளை இதயசுத்தியோடு பௌத்த மகா சங்கத்தினர் மேற்கொள்கின்றார்கள் என்றால், அதற்கான நல்லெண்ண சமிக்கைகளை தமிழ் மக்களுக்கு உணர்த்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறாமல், தமிழ்மக்கள் மீதான அடக்குமுறை, நிலஅபகரிப்பு, பெளத்த மதப்பரம்பல் என்பன மிகவும் வேகமாகத் தமிழ் தேசியத்தை அழித்து வருவதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

உண்மையில், இந்தப் பிரகடனமானது போர் குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றப்போவதோடு, போர் வெற்றி நாயகர்கள் எனச் சிங்களம் கொண்டாடி வருகின்ற போர்க்குற்றம் செய்த படைத் தளபதிகளையும் பாதுகாக்கும் உள்நோக்கத்தைக் கொண்டுள்ளதோடு, மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசுக்கு, அனைத்துலக நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை, ரணில் அரசாங்கம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது என்றதோர் மாயத்தோற்றத்தை வெளிக்காட்டி, சிங்கள அரசுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காக, இது போன்ற தமிழர் அமைப்புக்கள் சூழ்ச்சிப் பொறிக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற உண்மையை அனைவரும் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும்.

பல நூற்றாண்டுகளாக இனப் பிரச்சினைக்கு வித்திட்டு நீரூற்றி வளர்த்த, கடும்போக்குவாதிகளான பௌத்த மகா சங்கத்தினர், இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு தூரம் கீழிறங்கி வந்து, தமிழர் தரப்போடு நட்புறவுடன் சமரசம் பேசுகிறார்களென்றால், இதற்குப் பின்னால் உள்ள அழுத்தங்களையும், சூழ்ச்சிக் காரணங்களையும் ஆய்ந்தறிந்து எதிர்வினையாற்ற வேண்டிய பொறுப்பு வாய்ந்தவர்களாக, தமிழினத்தின் நலன்களில் அக்கறையுள்ள தமிழர் தரப்புச் செயல்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

இலங்கை அரசியலின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் பௌத்த மகா சங்கத்தினர், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றக்கூடிய வல்லமை, மேற்கு நாடுகளின் செல்லப்பிள்ளையாகிய ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாகக் கருதுகிறது. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்க வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. அதே சமயம் ரணில் விக்கிரமசிங்கவின் இருப்பைப் பாதுகாக்க வேண்டிய தேவை, தெற்காசிய ப் பிராந்தியத்தின் ஆதிக்கத்தைக் கையகப்படுத்தும், புவிசார் அரசியலின் அடிப்படையில் மேற்கு நாடுகளுக்கும் அவசியமாகவுள்ளது. ஒட்டுமொத்தத்தில் தமிழினத்தை அழித்தவர்களின் நலன்களுக்கும், மேற்குலக நாடுகளின் பிராந்திய விஸ்தரிப்புவாத நலன்களுக்கும், இந்தப் பிரகடனம் உதவப் போகின்றதே தவிர, தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு உதவப் போவதில்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டு, இனிவருங்காலத்தில் இவ்வாறான ஏமாற்றுப் பொறிமுறைக்குள் சிக்காமல், தமிழினத்தின் நலன்களில் அக்கறையுள்ள அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டுமென தமிழீழ அரசியல்துறை உரிமையுடன் வேண்டுகின்றது.

‘’தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’

திரு. பொ.அற்புதன்
நிர்வாகப் பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்.

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு! – தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள்.

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 23/05/2025 “தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு!” தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரன் லெப்டினன்ட் சங்கர் – சத்தியநாதன் அவர்களின் தந்தையாரும், வடமராட்சி, வல்வெட்டித்துறை, கம்பர்மலையைச் சேர்ந்த

Read more

“பூகோளத்தின் உயரிய ஆன்மீகத் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ்!”

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 26/04/2025   பூகோளத்தின் உயரிய ஆன்மீகத் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ்! கத்தோலிக்க திருச்சபையின் 266 வது திருத்தந்தை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு, உலக வாழ் கத்தோலிக்க மக்களையெல்லாம், ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Read more

Leave a Reply