தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
06.06.2024
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன்
எமது தமிழீழ தேசத்தின் நாளைய தூண்கள் மாணவச் செல்வங்களாவர். நாளை எம் நாட்டை மீட்டெடுத்து, அதனைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள் இவர்களே. எமது தேச விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை அர்ப்பணிப்புச் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு மகத்தானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ச்சி பெறுவதற்கு ஊன்றுகோலாக இருந்து, இப்போராட்டம் பெருவிருட்சமாக வளர்வதற்கு, பல வழிகளிலும் முன்னோடியாக இருந்தவர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களே.
தமிழீழத்தின் உரும்பிராய்க் கிராமத்தைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் அவர்கள் 26.08.1950 இல் பொன்னுத்துரை அன்னலட்சுமி இணையரின் மகனாகப் பிறந்தார். தமிழின உணர்வும், விடுதலை வேட்கையும் இயல்பாகவே இவரிடம் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரத்தில், இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில், உடுத்த துணியுடன் கண்ணீர் மல்க வந்திறங்கியபோது, தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு வந்திறங்க வேண்டும்; என்று எழுந்த கேள்விதான், எட்டுவயதிலேயே இவருக்குள் விடுதலைத் தீயை மூட்டியது.
1970 இல் ஆட்சிக்கு வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையும், இனவாதியுமான சிறீமாவோ பண்டாரநாயக்க, தமிழர்கள் மீது அளவுகடந்த வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார். தமிழர்களைக் கல்வியில் பின்தங்க வைக்கவேண்டும் என்ற சதித்திட்டத்தோடு, தமிழ் மாணவர்களின் உயர் கல்வியில் தரப்படுத்தல் எனும் முறையின் மூலம் சிறீமாவோ அரசு அடக்குறையை மேற்கொண்டது. இந்த அடக்குமுறைத் தாக்கத்தால் கிளர்ந்தெழுந்த தமிழீழ மாணவர்களால், தமிழர் மாணவர் பேரவை உருவாக்கம் பெற்றது.
1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் நாள் சிறீமாவோவின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, தமிழ் மாணவர் பேரவை வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழமெங்கும் நடத்தியது. இதனை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவர் மாணவ சமூகத்தினதும், தமிழ் மக்களினதும் அன்பையும், ஆதரவையும் பெற்றார். பொன். சிவகுமாரன் தலைமையில் தமிழ் இளைஞர்கள் திரள்வதைக் கண்ட சிங்கள அரசு, உரும்பிராய்க்கு வந்த சிங்கள உதவி அமைச்சர் ஒருவருக்குக் கைக்குண்டு வீசியதாக, சந்தேகத்தின் பெயரில் 1970இல் இவரைக் கைது செய்தது. இத்தனை கொடுமைகளைச் சிங்கள அரசு செய்த போதும், தனது கல்வியைக் கைவிடாது பல்கலைக் கழக பரீட்சையில் சித்தியடைந்தார்.
அந்தக் கால கட்டத்தில் இவரது பெற்றோர் இவரை இங்கிலாந்திற்குச் சென்று படிப்பைத் தொடர வற்புறுத்தினார்கள். ஆனால், இனப்பற்றும் விடுதலை வேட்கையும் மிக்கவரான பொன். சிவகுமாரன், தனது
பெற்றோரிடம், “நான் எங்கும் போகமாட்டேன். எனது உயிர் தமிழ் மண்ணிற்கே சொந்தமாகும், என் உடலில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கும் வரை இந்த நாட்டில் இருந்து கொண்டே எனது இனத்தின் விடுதலைக்காகப் போராடுவேன்” என்று இவர் அடிக்கடி கூறுவராம். அதுமட்டுமல்லாது, தனது பாசமிகு அம்மாவுக்கு தைரியம் ஊட்டுவதற்காக “உள்ள உயிர் ஒன்றுதான். அது போகப் போவதும் ஒரு தடவைதான். அப்படிப் போகும் இந்த உயிரை. ஒரு புனித இலட்சியத்திற்காக கொடுப்பதில் என்ன தவறுள்ளது?” எனக் கேட்கும் அந்த வீரத் தமிழ் மகனை, இன்று நினைவேந்துகிறோம்.
1970களின் தொடக்கத்தில், சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரபிதாவும், அப்போதைய சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவை குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்துச் சிதறியதில், வாகனத்தின் மேல்பாகம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால், துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியதால் அன்றைய தினம் அல்பிரட் துரையப்பா தப்பித்துக் கொண்டார். இந்தத் தாக்குதலே ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல் என்று வரலாற்றுப் பதிவாகவுள்ளது.
அதன் பின்னர், அல்பிரட் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டாண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர், மீண்டும் அவர் சில அடக்குமுறையாளர்களுக்கு எதிரான தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். தனியே தாக்குதல் முயற்சி என்பது மட்டும் அல்ல, விடுதலைக் குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கேற்று எழுச்சி உரைகளை வழங்கிச் செல்வார்.
1973 இல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த திரு. சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டத்திற்கு முன்பாகவே, சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் இவர்களது வழக்குகள் நடைபெற்றுவந்தன.
தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள், பொன். சிவகுமாரன் மனதைப் பலமாகப் பாதித்தது. தமிழாராய்சி மாநாட்டுப் படுகொலைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவைக் கொல்லும் முயற்சியினால் பொன். சிவகுமாரனைத் தேடி சிங்களக் காவற்படை வலைவிரித்தது. மாவீரன் பொன். சிவகுமாரன் தலைக்கு ஐயாயிரம் ரூபாய்கள் சன்மானம் விதித்தது சிங்கள அரசு. தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் மிகுந்த தியாகி பொன். சிவகுமாரன், சிங்களக் கைக்கூலியும், பெற்றோல் நிலைய அதிபருமான நடராசாவால் காட்டிக் கொடுக்கப்பட்டார். எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற வீரமரபின் முதல் வித்தாய் சயனைற்றை அருந்தி 05.06.1974 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தியாகி பொன். சிவகுமாரனின் வீரச்சாவுச் செய்தி கேட்டு, தமிழீழம் எழுச்சி கொண்டது. தமிழீழ மாணவர் சமுதாயம் தாயகம் மீட்பு என்ற அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு உணர்வெழுச்சியுடன் தயாரானது. சாவிலும் ஒரு சமூக மறுமலர்ச்சி செய்தார் மாவீரன் பொன். சிவகுமாரன். இவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள், அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அணிதிரண்டனர். அத்துடன் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த பெண்கள் பேரெழுச்சியாய்த் திரண்டு, தியாகி பொன். சிவகுமாரனின் இறுதி நிகழ்வில் மயானம் வரை சென்று எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.
தியாகி பொன். சிவகுமாரன் மறைந்த நாளாகிய யூன் 05ம் நாள், உலகச் சுற்றுச்சூழல் தினம் என்பதால், மறுநாளான யூன் 06ம் நாளை, தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிரகடனப்படுத்தினார். இந்நாளை தாயகம் அடங்கலாக, தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும், தமிழ் மக்களால் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.
தியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயன்ற இலட்சிய தாகத்தை, தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சுமந்து, காத்திரமானதோர் பரிமாணத்தோடு அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைத்துள்ளனர். அவரைப் போல் பல்லாயிரம் மாவீரர்களின் கனவான தமிழீழத் தாயகத்தை மீட்டெடுப்பதே நாங்கள் இவர்களுக்குச் செய்யும் தேசியக் கடமையாக இருக்கமுடியும்.
இன்று உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழ் மாணவர் சமூகம் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைவர் எம்மிடம் ஒப்படைத்த தமிழீழ இலட்சியத்திற்கு வலுச்சேர்த்து முன் நகரும் காலகட்டமிது. உலகம் தழுவி வாழும் தமிழ் மாணவர் சமூகத்தின் பெரும் பணி, தாயகத்தை மீட்டெடுத்து நிர்மாணிப்பதற்கு இன்று பெருமளவு சக்திகள் தேவையாக உள்ளது. காலம் எமக்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற, வரலாறாகிப் போன மாணவப் போராளி தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் வழிநடந்து, தாயக விடுதலையை வென்றெடுப்போமென, அவரது நினைவு நாளில் உறுதியேற்றுக் கொள்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
திருமதி. ச.அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்





















































































