“ஓயாது ஒலித்த கம்பீரக் குரலொன்று ஓய்ந்துவிட்டது.” – அறிக்கை

“ஓயாது ஒலித்த கம்பீரக் குரலொன்று ஓய்ந்துவிட்டது.”
01.05.2024

ஈழத் தமிழின வரலாற்றில் சுயநல வாழ்வைத் துறந்து, பொதுநலக் கடமையை இலட்சியமாக வரித்து, அந்த உயர்ந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த, அதி உத்தம மனிதர்களில் ஒருவரை இன்று தமிழர் தேசம் இழந்து விட்டது. தமிழீழ மண்ணினதும், தமிழீழ மக்களினதும் விடிவுக்காக ஓயாது ஒலித்த ஒரு கம்பீரக்குரல் இன்று ஓய்ந்துவிட்டது. இது தமிழீழ விடுதலை வரலாற்றுப் பயணத்தில் நிகழ்ந்த மாபெரும் துயர நிகழ்வுகளில் ஒன்றாகும்.

அமரர். ஈழவேந்தன் அவர்கள் ஓர் அற்புதமான மானிடப் பிறவி; அசாத்திய குண இயல்புகள் கொண்டவர். கம்பீரமான பேச்சும், சிறந்த எழுத்தாற்றலும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான மனப்போக்குமே அவருடைய ஆளுமையின் சிறப்பம்சங்களாகும். அஞ்சா நெஞ்சுறுதியும், அயராத செயற்திறனும் கொண்ட ஓர் நேர்மையான அரசியல்வாதி. தமிழீழ மக்களால் பெரிதும் போற்றப்பட்டதோர் தலைசிறந்த இன உரிமைப் போராளி இவராவார். இவரது சாவு தமிழர் தேசத்திற்கு என்றுமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இன வெறி பிடித்த சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் வாழ இவர் என்றுமே விரும்பியதில்லை. இந்த அடக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வு சிக்குண்டு சிதைந்து போவதை இவர் அறவே வெறுத்தார். இந்த அடக்கு முறையிலிருந்து தமிழீழ மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலை பெற்று சுதந்திரமாக, நிம்மதியாக, கௌரவமாக வாழ்வதையே இவர் தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துக் கொண்டார். இந்த இலட்சியத்தால் உந்தப்பெற்று, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக நின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் இலட்சியத்தையும் முழுமையாக, முழு மனதுடன் ஏற்று தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தார்.

பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளிலும், பல்வேறு அச்சுறுத்தல், ஆபத்துகளுக்கு மத்தியிலும் மிகுந்த துணிவுடன் தமிழ்த்தேசியத்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் பல்வேறு வழிகளில் கைகொடுத்து உதவினார். 1956ம் ஆண்டு பண்டாவின் சிங்கள மொழித் திணிப்புக்கு எதிராகத் தனது அரச பதவியைத் தூக்கியெறிந்தது முதல் இலங்கை, இந்தியா மற்றும் கனேடிய அரசுகள் யாவும் இவர் மீது பிரயோகித்த எந்தவிதமான அழுத்தங்களுக்கும் அடிபணியாது, “ஈழம் வெல்லும் அதைக்காலம் சொல்லும்” எனும் தன்னுருவாக்க உறுதியேற்புடன், தமிழீழ மக்களது உரிமைக்காக இடையறாது தொடர்ந்து இறுதிவரை போராடினார். தள்ளாத வயதிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும், உண்மைகளையும் உலகத்திற்குப் பரப்புரை செய்தார். அன்னார் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை, என்றும் தமிழ் மக்களின் அளப்பெரிய பாராட்டுக்குரியவை.

அமரர். ஈழவேந்தன் ஐயாவின் இனப்பற்றிற்கும், விடுதலை வேட்கைக்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக அவருக்கு “மாமனிதர்” என்ற அதி உயர் தேசிய விருதை வழங்குவதில் தமிழீழ அரசியல் துறையினராகிய நாம் பெருமை அடைகின்றோம். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் இவர்கள் என்றும் உயிர் வாழ்வார்கள்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

திருமதி. ச.அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply