தமிழ்த்தேசியத்தை தழைத்தோங்கி வளர்த்தெடுக்க, எம் விடுதலைக்கான பாதையின் தடைகளை அகற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு எம் இனத்திற்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை உலக மன்றங்களில் இனவழிப்புக் குற்றமாக நிரூபித்துக் கொள்வதற்குரிய செயற்பாடுகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.
கடந்த 15 வருடங்கள் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு மியான்மர் (பர்மா) மற்றும் சிரியாவிற்குக் கொண்டு வந்த குற்றவியல் நீதி விசாரணைத் தரத்தில் அமைந்த சாட்சியங்கள் திரட்டும் பொறிமுறை (Sri Lanka Accountability Project – SLAP) ஒன்று 2021 மார்ச்சில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை அதன் சகோதர அமைப்புகளுடன் இணைந்து கொண்டுவரப்பட்டது. இது மீண்டும் செப்டம்பர் 2022 தீர்மானம் மூலம் பலப்படுத்தப்பட்டது.
இதற்கான சாட்சியங்கள் ஐ.நா. அதிகாரிகளினால் மிகவும் பொறுப்பாகவும் இரகசியம் பேணும் நடைமுறை அடிப்படையிலும் திரட்டப்பட்டு வருகிறது. நாம் பல்வேறு தடவைகள் பலரையும் அணுகி சாட்சியங்களைத் திரட்டி தருமாறு கோரினோம், அல்லது அவர்களை நேரடியாக இதனைக் கையாளும் பொறிமுறைக்கு அறிமுகப்படுத்தி விடுங்கள் எனவும் தாழ்மையாக விண்ணப்பித்து வருகிறோம்.
இங்கே மிகவும் கவலைக்குரிய விடயம் எதுவென்றால் தத்தமது அரசியல் தேவைகளுக்காக அல்லது மேடைகளுக்காக அல்லது ஊடக செயற்பாட்டிற்காக பல தடவைகள் “இன அழிப்பு” என்று உரக்கக் குரல் கொடுத்த பலர் இப் பொறிமுறையை (SLAP) பயன்படுத்திச் சாட்சியம் திரட்டவோ அல்லது மக்கள் மத்தியில் எடுத்துரைக்கவோ முன்வராதது தான்.
உரிய நேரத்தில் காத்திரமான கடமைகளைச் செய்யாமல், ஏனையோரைக் குற்றம் சாட்டுவது மட்டுமே தமது பாதையாக வரித்து கொண்டவர்களைப் பற்றி நாம் கரிசனை கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும், தமிழ்த்தேசியத்தையும், இன விடுதலையையும் உயிராக நேசிப்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த இறுதி கட்டத்திலாவது துரித கதியில் ஐ.நா. பொறிமுறைக்கான சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று வேண்டிகொள்கிறோம். வரலாற்றின் தவறான பக்கங்களில் நாம் இருந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் உடனே செயல்பட முன்வாருங்கள்.
நாம் நிச்சயம் வெல்வோம்.
இது குறித்த விடயங்கள் இந்த காணொளிகளில் மிகவும் விபரமாக உரையாடப்படுகிறது.


















































































