1998.04.20 | புலிகளுக்கேயுரிய தனித்துவமான வீர முடிவை எடுத்த புலிவீரன் “கப்டன் அன்பழகன்”

கப்டன் அன்பழகன்

‘ஜயசிக்குறுய்’ படைகள் தம் நடவடிக்கையைத் தொடங்கி ஓராண்டு அண்மித்துவிட்டது. வெற்றி நிச்சயம் என வந்தவர்கள் கேள்விக்குறியோடு நின்றனர். இராணுவம் ஓர் உடனடி வெற்றியைத் தேடியது. இராணுவத்தைப் பகடையாக்கிவிட்ட அரசு ஒரு வெற்றிச் செய்திக்காக ஏங்கி நின்றது. அரசு, படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவிவிட, எம்மிடம் அடிவேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின்வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டும் முயன்றனர்.

20, சித்திரை, 1998ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான் தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்திருந்தான் நாம் பழைய நிலையிலேயே இருந்தோம்.

எதிரி எப்படியும் மாங்குளத்தை அன்று பிடித்துவிட வேண்டும் என்ற முடிவோடிருந்தான். அதற்காக ஒலுமடுப் பகுதியூடாகவும் கனகராயன் ஆற்றுப்பகுதியாலும் மூன்று முறிப்பாலும் சண்டையைத் தொடக்கியிருந்தான். எம் போராளிகள் சிலரின் சாவே அவனது இலக்கை எட்டும் நிலையை ஏற்படுத்தப் போதுமானதாகவிருந்தது.

எமது போராளிகள் சிலரே காவலில் நின்ற அக் காவலரண் தொடரின் ஒரு பகுதியை நோக்கி, ஒன்றல்ல இரண்டல்ல பல ராங்கிகள் அணிவகுத்து முன்னேறின. முன்னேறுவது பின்னர் தரித்து நின்று எம் நிலைகள்மீது அடிப்பது. பின் முன்னேறுவது என எதிரி ராங்கிகள் முன் னேறிக்கொண்டிருந்தன.

எம்மிடம் இருந்ததோ சாதாரண துப்பாக்கிகள். நாம் சுடச்சுட எதிரி முன்னேறினான். எம்மவர் இயன்றவரை சுட்டனர். சுட்ட ரவைகள் எல்லாம் எதிரியின் உருக்கு இயந்திரங்களிற்பட்டுச் சிதறி விழுந்ததைத் தவிரப் பயன் ஏதும் ஏற்படவில்லை .

நவீன கவச எதிர்ப்பு ஆயுதங்கள் அன்று அவ்விடத்தில் எம்மிடம் இருக்கவில்லை. எம்மால் ராங்கிகள்மீதான எதிர்ப்பைக் காட்டமுடியாத அவலநிலை. எம்மிற் பலரின் உயிர்களைக் குடித்துவிட்டு ராங்கிகள் சில எமது காவலரண்கள் மீதும் ஏறிவிட்டன.

எல்லாம் முடிந்த நிலை. எஞ்சிய போராளிகள் சிலர் மட்டுமே காவலரணில் நின்றனர். இப்போது அந்தச் சண்டையைத் தீர்மானிக்கும் பொறுப்பு அங்கே எஞ்சி நின்ற சிலர் மேலேயே. அவர்களின் முடிவே அன்றைய சண்டையின் முடிவு. நாளைய சமரின் முடிவு. காவலரணில் ஏறிவிட்ட ராங்கியை ஏதாவது செய்தாகவேண்டும்.

எண்ணிக்கையில் நாம் குறைந்திருந்தோம். எதிரி வருவது உருக்கு இயந்திரங்களில்.

எமது காப்பரண் வேலியை உடைத்து அதனூடாக எதில் நகர்வது, ஜயசிக்குறுய் போரில் எதிரியைத் தடுப்பதற்கான எமது ஒரு வருட உழைப்பை வீணாக்கிவிடும். எதிரியின் ‘ஜயசிக்குறு’ கனவு பலித்துவிடும். ஜயசிக்குறு நடவடிக்கையை முறியடிப்பதற்காக எமது போராளிகளின் உயிரைக் கொடுத்து நாம் செய்த ஈகமும் துன்பங்களும் அர்த்தமற் றவையாகிவிடும். இத்தனையையும் சாதித்துவிட முயன்றது எதிரியின் ராங்கிப்படையின் நகர்வு. அன்று எம்மிடம் ராங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லாமையே எதிரிக்கு வாய்ப்பைக் கொடுத்தது.

எப்படி விடமுடியும். எமது காப்பரண்கள் இரத்தமும் சதையுமாகிவிட்டன. அவற்றை எப்படி எதிரியிடம் விடமுடியும். விடுவோமாயின் முடிவு வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாததாகி விடுமென்பதை எஞ்சிநின்றவர்கள் நன்கு

உணர்ந்திருந்தனர். வரப்போகும் சிக்கலைத் தன் போர்ப்பட்டறிவின் மூலம் நன்கு உணர்ந்தான் அன்பழகன், எல்லாவற்றுக்கும் மேலாக அப்போது தனக்கிருந்த கடமையை அறிந்தான். தன்னில் தங்கி ஒரு சண்டையை, சண்டையின் முடிவை, சண்டையின் முடிவால் தான் நேசித்த மக்களுக்கு ஏற்படப்போகும் தாக்கத்தை நன்கு விளங்கிக ‘ கொண்டான். இறுதித் தீர்மானமொன்றை எடுத்தான். தன் உயிராற் கூடியபட்சம் செய்யக் கூடியதைச் செய்ய முடிவெடுத்தான். தன் தேசத்திற்காகத் தன்னால் உயர்ந்தபட்சம் எதைச் சாதிக்க முடியுமோ அதைச் சாதித்தான்.

காப்பரணுக்கு மேலே ஏறிய ராங்கி ஒன்றினுட் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன். எதிரியின் ராங்கி குண்டினால் வெடித்தபோது அவன் அங்கு நின்ற போராளிகளின் நெஞ்சில் நிறைந்தான். ‘அவன் தன் தேசத்திற்காகச் செய்யவேண்டியதை உணர்ந்தேயிருந்தான். உறுதியான புலிவீரன் என்பதை எண்பித்தான்’ என்று அவனது தளபதிகள் புகழாரம் சூட்டினர்.

அன்பழகன் எடுத்த புலிகளுக்கேயுரிய தனித்துவமான அந்த வீர முடிவு அன்றைய சண்டையின் முடிவை மாற்றியது. ராங்கிகள் நுழைந்த சொற்ப நேரத்தில் அந்தப் பகுதி எதிரிகளாற் கைப்பற்றப்பட இருந்த அபாயத்தை நீக்கியது அவனின் வீரச்செயல்! தலைவனின் ‘சத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப்பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்’ என்ற கூற்றை எண்பித்தான் அந்தப் போராளி.

எம்மால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட எதிரியின் ‘ஜயசிக்குறுய்’ சமரும் அதனால் இன்று வெற்றிகரமாகத் தொடரும் புலிகளின் ‘ஓயாத அலைகள்’ சமர்களும் எம் போராட்டத்தின் புதிய அத்தியாயங்களெனின் அதில் அவன் ஒரு முக்கிய பக்கம்.


தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

Leave a Reply

Discover more from தமிழீழ அரசியல்துறை

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading