அண்ர்வெற்பன் 16.03.2024
கண்டன அறிக்கை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பெல்சியம்

வவுனியா மாவட்டம் ஒலுமடு கிராமத்தில் இருக்கும் வெடுக்குநாறி மலைத்தொடரில் குடிகொண்டிருக்கும் ஆதிலிங்கேசவரருக்கு, சிவன் இராத்திரியில் தமது வழிபாடுகளை நடத்துவதற்காகச் சென்ற தமிழ் மக்களைச் சிறிலங்கா காவற்துறை தடுத்து நிறுத்தியிருந்தது. இந்நிலையில், அதனைத்தாண்டி மக்கள் ஒன்றுதிரண்டு செல்வதற்கு முயன்றபோது, மக்களை ஊர்திகளில் செல்லவிடாது நடந்து செல்லுமாறு காவற்துறை கூறியிருந்தனர். கடுமையான வெப்பம் நிலவிய சூழலிலும் குடி தண்ணீரைக்கூடக் கொண்டு செல்லவிடாமல் தடுத்ததுடன் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவர்மீதும் மோசமாக காவற்துறைநடந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், ஆதிலிங்கேசவரருக்குப் பூசை செய்து கொண்டிருந்த மக்களைப் பூசை செய்யவிடாது கடுமையாகத் தாக்கியதோடு, மனிதாபிமானமற்ற முறையில் அம்மக்களை இழுத்துச் சென்று ஆடைகளைக் களைந்து கைது செய்து கொண்டு சென்றிருக்கின்றனர். ஆதிசிவனை வழிபடச் சென்ற மக்களோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராசா கஜேந்திரனும் சென்றிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூடப்பார்க்காமல் இவரை, காவற்துறையினர் மிகமோசமாகத் தாக்கி இழுத்துச் சென்றிருக்கின்றனர். அத்துடன், ஆடைகளைக் களைந்து மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் சிறிலங்கா காவல்துறையானது அம்மக்கள் மீது நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், வழிபடச்சென்றவர்களில் 8 பேரை கைது செய்து சிறைச்சாலையில் தற்போது தடுத்துவைத்துள்ளனர்.
அச்சிறைச்சாலையில் இடவசதியின்மையால் இருப்பதற்குக் கூட இடமில்லாத நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கின்றார். இச்சிறையில் உள்ளவர்களில் 5பேர், தம்மை விடுதலை செய்யக்கோரி, உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திலும் தற்போது ஈடுபட்டுவருகின்றனர். அவர்களினதும் அவர்களின் குடும்பங்களின் நிலைமைகளும் மோசமான சூழலில் தற்போது காணப்படுகின்றன. சிறிலங்கா அரசின் இம்மோசமான அடக்குமுறையினை நாம், வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மதவழிபாடானது தனிமனித உரிமையாகும். அவ்வாறிருந்தும் ஆதிலிங்கேசவரர் கோவிலில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னரே மக்கள் கோவிலை சென்றடைந்திருந்தனர். எனவே, நீதிமன்ற உத்தரவையும் மதிக்காத சிறிலங்கா காவற்துறை அதிகாரிகளின் மோசமான இச்செயற்பாடானது, சிறீலங்கா நீதித்துறை மீதான நம்பிக்கையைக் கேள்விக்குரியதாக்கியுள்ளது.
தொடர்ந்து தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதும் உரிமைகள் மறுக்கப்படுவதும் சிறீலங்கா அரசால் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். தாயகத்தில் போராடும் மக்களுடன் இணைந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் நாமும் தொடர்ந்தும் குரல்கொடுப்போம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”



















































































