
சுதேந்திரராஜா / சாந்தன்
2024.02.28
செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சாந்தன் இயற்கை எய்தினார் , அவருக்காகவே உயிரைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிற அவரது தாயாரை பார்க்காமலே சென்றுவிட்டார்,
செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து,பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும் சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாமில் அடைத்து சித்திரவதைக்கு ஆளான திரு சாந்தன் அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (2024.02.28) காலை காலமானார். கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில், “சாந்தன் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சென்னை – ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம்.
கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயங்களில் சுயநினைவு குன்றி, இயல்பு நிலைக்கு திரும்புவார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நேற்று இரவு உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார். செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்”
எப்படி உயிரிழந்தார் சாந்தன்?
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், “சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் மருத்துவர் பிரேம்குமார் தலைமையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது,” என்றார்.
“அவருக்கு Cryptogenic cirrhosis பிரச்சனை ஏற்பட்டிருந்ததால் அந்தப் பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதை அறிய முயற்சித்துவந்தோம்.
“கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் சுயநினைவு இழப்பதும் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று இரவு (பிப்ரவரி 27) பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
“அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல், அவர் உயிரிழந்தார்,” என்று கூறினார்.
சாந்தன் தனக்கு தற்காலிக பயண ஆவணங்களைக் கோரிவந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழக்கிழமை, அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று வெளிநாட்டவருக்கான பிராந்திய பதிவு அலுவலகத்தில் இருந்து பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகள் தீவிரமடைந்தன.
உடல்நலம் சரியானதும் அவர் இலங்கைக்கே திரும்பிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய உடல்நலம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து, உயிரிழந்திருக்கிறார்.
சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி:

சாந்தனின் உடலுக்கு நளினி அஞ்சலி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 2024.02.28

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 2024.02.28


















































































