“பார்வதியம்மாள்” மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கவிதை.!

பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை.!

சொல்லைக்  கல்லாக்கி…
கவிதையைக் கவண் ஆக்கி…
வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி
வாலி வாசித்தது கவிதை..
இல்லை..
வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று..அது இது…

கவியரங்கம் தொடங்குமுன் – ஒரு கண்ணீர் அஞ்சலி…

ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து-
பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு;
அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி
வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?
மாமனிதனின் மாதாவே ! – நீ

மணமுடித்தது வேலுப்பிள்ளை; மடி சுமந்தது நாலு பிள்ளை !
நாலில் ஒன்று – உன் சூலில் நின்று – அன்றே தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது ; உன் பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை

ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று…
சூளுரைத்து – சின்னஞ்சிறு தோளுயர்த்தி நின்றது ;
நீல இரவில் – அது நிலாச் சோறு தின்னாமல்
உன் இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில்
சூடும் சொரணையும் வர சூரியச் சோறு தின்றது;

அம்மா ! அதற்கு நீயும் – அம்புலியைக் காட்டாமல் வெம்புலியைக் காட்டினாய்;
அதற்கு, தினச் சோறு கூடவே இனச் சோறும் ஊட்டினாய்;
நாட்பட – நாட்பட – உன் கடைக்குட்டி புலியானது; காடையர்க்கு கிலியானது !
‘தம்பி ! தம்பி !’ என நானிலம் விளிக்க நின்றான் அந்த நம்பி;
யாழ் வாழ் – இனம்இருந்தது – அந்த… நம்பியை நம்பி;
அம்மா ! அத்தகு – நம்பி குடியிருந்த கோயிலல்லவா – உன் கும்பி !

சோழத் தமிழர்களாம் ஈழத் தமிழர்களை… ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி;
அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை – செப்பாக்கி;

அவர்கள் வாழ்வை வெட்டவெளியினில் நிறுத்தி வெப்பாக்கி;
மான உணர்வுகளை மப்பாக்கி;
தரும நெறிகளைத் தப்பாக்கி – வைத்த காடையரை வீழ்த்த…
தாயே உன் தனயன் தானே – தந்தான் துப்பாக்கி !

‘இருக்கிறானா ? இல்லையா ?’ எனும்  அய்யத்தை எழுப்புவது இருவர் ;
ஒன்று – பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று ஈழத்தமிழர்க்கு – அரும்பொருள் ஆன பிரபாகரன் !

அம்மா ! இந்த அவல நிலையில் – நீ… சேயைப் பிரிந்த தாயானாய்;
அதனால் – பாயைப் பிரியாத நோயானாய் !

வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி – வந்தாய் சென்னை; அது – வரவேற்கவில்லை உன்னை !
வந்த வழிபார்த்தே – விமானம் திரும்பியது;
விமானத்தின் விழிகளிலும் நீர் அரும்பியது !

இனி அழுது என்ன ? தொழுது என்ன ?
கண்ணீர்க் கலப்பைகள் – எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன ?
பார்வதித்தாயே ! – இன்றுனைப் புசித்துவிட்டது தீயே !

நீ – நிரந்தரமாய் மூடிக்கொண்டாய் விழி;
உனக்குத்தங்க இடம்தராத எங்கள் தமிழ்மண்
நிரந்தரமாய்த் தேடிக்கொண்டது பழி !

கவியாக்கம் :- தமிழக திரையுலகக் கவிஞர் வாலி.

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

Leave a Reply

Discover more from தமிழீழ அரசியல்துறை

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading