தமிழீழத்தின் கரிநாள் பெப்ரவரி 04 – அறிக்கை

தமிழீழத்தின் கரிநாள்
பெப்ரவரி 04

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே !

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 04ம் நாள், ஈழத் தமிழர்களாகிய நாம் குடியேற்றவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு, சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிக்கிக் கொண்ட, துயர்நிறைந்த துக்கநாளாகும். இதன் காரணத்தால், சிறீலங்கா சுதந்திரம் அடைந்த இந்த நாளை ஈழத் தமிழர் தாயகத்திலும், அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும், தமிழ் மக்கள் கரிநாளாகத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள், தமிழர்களை அரவணைத்து வாழ விரும்பாது, ஆயுத முனையில் அடிமை கொண்டு அடக்கியாளவே விரும்புகிறார்கள். இந்த இன ஒடுக்குமுறையானது உச்சமடைந்து இனவழிப்பாக வடிவமெடுத்த சூழ்நிலையில்தான் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்காக ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். 2009 மே 18 வரை எமது உயிர் வாழும் உரிமைக்காக உயிரைக் கொடுத்துப் போராடிய ஈழத் தமிழர்களாகிய நாம், இன்று நிராயுதபாணிகளாக ஒரு சிக்கலான, நெருக்கடியான வரலாற்றுச் சூழலை எதிர்கொண்டு நிற்கிறோம். எமது இனத்தை இதுபோன்றதோர் இக்கட்டான நிலைமைக்குள் தள்ளிவிட ஒத்துழைப்பு வழங்கிய சர்வதேச சமூகம், ஆயுதப் போராட்டம் அமைதியுற்று 15 ஆண்டுகளாகியும், எமது மக்களுக்கு நீதியான அரசியல் தீர்வை வழங்குவதில் அக்கறையுடன் செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் இன்றுவரை எமக்குத் தென்படவில்லை.

ஈழத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குப் தீர்வு காணும் விடயத்தில் காலங்காலமாகத் தமிழினம் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒப்பந்தங்களைச் செய்வதும், மீறுவதும், கிழித்தெறிவதும், சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக்கொண்ட வரலாற்றுப் பாடமாகும். தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தின் புவியியல் முக்கியத்துவத்தையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து, தமிழரின் தேசிய வாழ்வைச் சிதறடிப்பதில், சிங்கள ஆட்சியாளர்கள் சேனநாயக்க முதல் ரணில் விக்கிரமசிங்க வரை புதிய வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து வருகிறார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் எல்லோரையும் விட ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறை மிகவும் வஞ்சகமானது. தனது சனாதிபதி இருப்பைப் பலப்படுத்தவும், போர்க் குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும், சர்வதேசத்தின் நெருக்கடிகளை தணிப்பதற்காகவும், தமிழர்களோடு நட்போடு உறவாடுகிறோம் என்ற தோற்றத்தைக் காண்பிக்கவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் தேசியத்தை நேசிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்து, கட்டமைப்பாக இயங்கும் திறன் இழந்த புலம்பெயர் அமைப்புக்களோடு பேச்சுக்களை முன்னெடுத்து, சூழ்ச்சிகரமாக அவருக்கே உரித்தான பாணியில் காய் நகர்த்தி வருகிறார்.ஆகையால், ரணில் விரித்திருக்கும் சூழ்ச்சிப் பொறிக்குள் எமது இனத்தைச் சிக்க வைக்காமல் எச்சரிக்கை உணர்வோடு, சாதுரியமாகச் செயற்படுமாறு தமிழர் தரப்பு பிரதிநிதிகள் அனைவரையும் வேண்டி நிற்கிறோம்.

தமிழீழ அரசியல்துறையினராகிய நாமும், சிறீலங்கா சுதந்திரமடைந்த பெப்ரவரி 4ம் நாளைக் கரிநாளாக, எம் மக்களோடு ஒன்றிணைந்து கடைப்பிடிப்பதோடு, தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலை, சர்வதேச சமூகத்தை நோக்கி ஓங்கி ஒலிக்க உழைப்போரோடு கரங்கோர்த்து நாமும் தடம் பதிக்கிறோம். குறிப்பாக தாயகத்தில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினரும், ஏனைய தமிழ் அமைப்புகளும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு எமது தார்மீக ஆதரவைத் தெரிவிக்கிறோம். தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசிய விடுதலை நோக்கிய சகல சனநாயக வழிப் போராட்டங்களையும் அமைப்புப் பேதமின்றி, கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்.

இன்று சிறீலங்கா பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டிருந்தாலும், சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட தமிழர் இனவழிப்பு நடவடிக்கைகளை மிகவும் நுட்பமாகத் திட்டமிட்டு நிகழ்த்தி வருகிறார்கள். இந்த இனவழிப்பு நடவடிக்கைகளைப் பிரச்சாரப் பொய்களால் மூடி மறைத்து உலக நாடுகளை சிறீலங்கா ஏமாற்றி வருகிறது. இதனைச் சர்வதேச சமூகம் இன்றுவரை புரிந்தும் புரியாதது போல் நடந்து கொள்வது எமது மக்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது.

சர்வதேச சமூகம் எமது மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தைப் புரிந்துகொண்டு ஆதரவு வழங்குவதோடு, சிறீலங்காவின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்குச் சமமாக, ஈழத் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரமுள்ள நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதிலும் கரிசனை செலுத்த வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். இன்று நாம் கடைப்பிடிக்கும் கரிநாளில், ஈழத் தமிழினம் இதனையே சர்வதேச சமூகத்திடம் இருந்து எதிர்பார்த்து நிற்கிறது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

திருமதி
ச.அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

Read more

Leave a Reply